பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை

நடிகை பாவனா கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பிடம் சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க சிலர் சதி செய்வதாக திலீப் புகார் கூறினார்.
பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை
Published on

பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த பாவனா இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.

இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார். மேலும் சுனிலின் நண்பர் வினோத் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்து அதற்கான ஆதாரங்களை திலீப் வழங்கினார்.

இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் நேற்று முன் தினம் மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர்.

விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என்று திலீப்பிடம் போலீசார் தெரிவித்தனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது திலீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாவனா கடத்தல் வழக்கில் என்னிடம் போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் தெளிவாக பதில் கூறி விட்டேன். விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க சிலர் சதி செய்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது.

மலையாள திரைப்பட கலைஞர்கள் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் ஊடகங்கள் முன்பு அமர்ந்து தற்போது தெரிவிக்க இயலாது. அதற்கான பதிலை போலீசாரிடமும், கோர்ட்டிலும் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com