இந்தியாவில் வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவு

கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன.மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
இந்தியாவில் வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவு
Published on

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA) தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 13 லட்சத்து 53 ஆயிரத்து 280 இருசக்கர வாகனங்கள், 94 ஆயிரத்து 181 ஆட்டோ, 3 லட்சத்து 3 ஆயிரத்து 398 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 65 ஆயிரத்து 574 டிராக்டர்கள், 82 ஆயிரத்து 763 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 46 ஆயிரத்து 328 வாகனங்கள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ''நாங்கள் நடத்திய முந்தைய ஆய்வின்படி பிப்ரவரி மாதம் வாகனங்களின் பதிவு குறைவாக இருக்கும் என்று கணித்திருந்தோம். அதன்படியே அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களின் பதிவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய தேவையை சிறப்பாக சீரமைத்து, இலக்கை அடையும் வகையில் மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு மேம்படும் என்று கருதுகிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com