search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவனடியார்"

    • சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
    • மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது.

    தங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தர்களின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி, ஆட்கொள்வான். அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக்கஞ்சாறர்.

    மானமேப் பெரிதென வாழ்ந்த வேளாளர்க்குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்கு தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். ''மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்'' என்று சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறு இன்றி வருந்திய இவருக்கு ஈசன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்.

    அவளுக்கு 'புண்ணியவர்த்தினி' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணம் முடித்திட, பெரியவர்கள் நிச்சயித்தனர்.


    திருமண நாளும் வந்தது. சுற்றமும், நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன் மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு, எலும்பு மாலைகளையும் அணிந்து கொண்டு, கேசத்தையே பூணூலாக தரித்துக் கொண்டு, உடல் முழுதும் விபூதி பூசிய வண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

    அவரைக் கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீசர்.

    ''ஆஹா, இந்த நீண்டக் கூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே'' என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று கூட கருத்தில் கொள்ளாத மானக்கஞ்சாறர், உடன் தனது வாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந்தார்.

    மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து, கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர்மல்கச் செய்தார் கயிலைநாதர். ''உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே தாம் இவ்வாறு செய்தோம்'' என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது. ஈசனுக்கே தனது கேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இரு வரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.


    ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கவுமாரி வழிபட்ட இப்பதி பாரிஜாத வனமாக திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டு கோளுக்கு இணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி ''பரத்வாஜாசிரமம்'' என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் இத்தலம் கஞ்சாறூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

    ஆனந்த மாமுனிவர் அனுதினமும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாம பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பல வாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது. அன்றைய தினம் ராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சாறூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த முனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கினார் அனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்று முதல் ஆனந்தத் தாண்டவபுரம் என்றே அழைக்கலானது.

    ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டியருளியதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆனந்த தாண்டவபுரத்திலேயே அந்த அருட்காட்சியை கண்டு மகிழலாம். அதோடு சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோ கூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.


    மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே 'குஞ்சிதபாதம்' என்று போற்றப்படுகின்றது. திருவாசியின் துணையின்றி முயலகன் மீது மட்டுமே தனது வலது காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

    உற்சவர் சிலைகளில் விசேஷ மூர்த்தியாகத் திகழும் ஸ்ரீ ஜடாநாதர், அறிந்தக் கூந்தலை தனது இடது கையில் பிடித்தபடி காட்சி தரும் தரிசனத்தை வேறு எங்கும் நாம் காண முடியாது. அருகே மானக்கஞ்சாறரது விக்ரஹமும் உள்ளது. பின் தென் முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சன்னதி கொண்டிருக்கிறாள். அம்பிகையை வணங்கி ஈசன் சன்னிதியை அடையலாம்.

    கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், ஸ்ரீபஞ்சவடீஸ்வரர். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை ஸ்ரீகல்யாணசுந்தரி கிழக்கே முகம் காட்டி, தனியே சன்னிதி கொண்டிருக்கிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி - தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கின்றது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.

    இங்குள்ள அமிர்த பிந்து தீர்த்தத்தில் நீராடி, இறை வன் - இறைவியை வழிபடுபவர்களுக்கு எல்லா விதமான தோல் நோய்களும் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முற்பிறவியில் ஏற்பட்ட சாப-பாப-தோஷங்கள் யாவும் இத்தலத்தை வழிபட்டால் போக்கிக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை - சேத்தூர் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம்.

    • சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
    • சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

    விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

    அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.

    ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

    ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

    திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

    திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

    பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

    அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

    "இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.

    விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.

    அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

    "இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

    அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

    விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

    விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.

    • நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
    • 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    • இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது
    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டை வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். தைப்பூசம் அன்று காவடி எடுத்து பக்தர்கள் தெருபவனி வருகின்றனர்.

    இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் பிரதிநிதிகள் மேற்பார்வை யில் கோவில் நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வந்தது. பிரதிநிதிகள் வாரிசுகள் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில் கோவில் நிர்வாகத்தில் சிக்கல் வந்ததாலும் கொரோனா காலத்தில் தொடர்ந்து கோவில் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவில் குளத்தை அப்பகுதியில் உள்ள சிலர் மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வாமித்திரர் சைவ சபாவின் திருநீலகண்டர் உழவாரப்பணி மகான் மணிகண்டன், உழவாரப்பணி அமைப்பு சார்பில் சிவனடியார்கள் கோவில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தனர்.

    குளத்தில் கன்னிமூலையில் விநாயகர் சிலை இருந்தது கண்டு அதனை சுத்தம் செய்து அதற்கு பால், தேன், நெய், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. உழவாரப்பணி அமைப்பு சிவனடியார்கள் முயற்சியினை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.

    • சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.
    • தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சார்பில் சுந்தரமூர்த்தி நாயனாரின், தேவார முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவு நாளன்று ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமி பேசியதாவது:-

    சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.குருவருள் இருந்தால் மட்டுமே திருவருளை பெற முடியும். நாயன்மார்கள், ஞானிகள், சித்தர்களில் யாராவது ஒருவரை, மானசீக குருவாக நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.யார் ஒருவரையும் பார்க்கும் போது, எண்ணம், செயல், சொல் ஆகியவற்றை பிரயோகிக்க முடியாத நிலை வருமானால், அவரே உமது குரு. ஏதாவது பலனை எதிர்பார்த்து, தேவார திருமுறைகளை பாடக்கூடாது.எதிர்பார்ப்பின்றி, இறைபக்தியுடன் பதிங்களை பாடுவதால் அனைத்துமே கிட்டும். பட்டியல் போட்டு கோரிக்கையை வைப்பதால், அவ்வளவு எளிதாக இறைவன் இரக்கம் காட்டுவதில்லை.

    ருத்ராட்சம் அணிந்து சிவனடியாருக்கு தொண்டு செய்வதே சிவநெறி. தொண்டு செய்வதில், சிறியது - பெரியது என்பது இல்லை. மானசீகமாக தொண்டாற்றுபவரே உண்மையான சிவனடியார். ஞானசம்பந்தரும், ராமானுஜரும் ஜாதிகளை கடந்து, சமயங்களை வளர்த்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புரட்சியாளராக இருந்தனர்.சைவ நெறியில் இருப்பது போல் மற்ற சமயங்களில் உள்ள நல்ல வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீநடராஜர் படத்தை வீடுகளில் வைத்து தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×