search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்றுமதியாளர்"

    • அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
    • தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூா்:

    பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய உள்நாட்டிலேயே பின்னலாடை எந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.

    பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகியவற்றின் பங்களிப்பிற்காக எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும்.

    பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளான எந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, எந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக எந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாா் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் எந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற்கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட்டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் ‘ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர்:

    மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் 'ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது. திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் 'ஜெட்' தரச்சான்று பெற விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேருக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. டீமா தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கி பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார். பின்னர் தரச்சான்று பெறும் வழிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.

    டீமா பொருளாளர் சுபாஷ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை உதவி இயக்குனர் மனீஷ் வசிஸ்தா, துணை மேலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தொழில்துறையினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இயக்குவதற்கு அங்கீகாரமாக 'ஜெட்' தரச்சான்று பெற்று பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் டீமா சங்கம் சார்பில் திருப்பூர் பேஷன் இன்ஸ்டிடியூட் புதிதாக தொடங்கப்பட்டது. நூல், நிட்டிங், பேட்டர்ன் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மெர்ச்சன்டைசிங், காஸ்ட்டிங் அண்ட் புரோகிராமிங், ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, தர மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி முடிந்ததும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முழுநேரம், பகுதி நேர பயிற்சியும் உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் வந்தனர்.
    • சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. பனியன் உற்பத்தி வேகமெடுத்து வரும் நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வந்தனர். இந்த குழுவின் தலைவர் அவிடேஸ் செபரியன், துணைத்தலைவர் மார்க் ஜேகர் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணைசெயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் உலக அளவிலான 12 விதிமுறைகளை கடைபிடித்து ஆடைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்து அந்த நிறுவனங்களுக்கு 'உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி' என சான்று வழங்குவார்கள். இந்த சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    ஏற்கனவே திருப்பூரில் சாயக்கழிவுநீர் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 90 சதவீத நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் பசுமை திருப்பூராக மாற்றும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்களாக வளர்ந்துள்ளன. இதுதவிர காற்றாலை, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பின்னலாடை நிறுவனங்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விவரங்களை அமெரிக்க குழுவினர் கேட்டறிந்தனர்.

    மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தினர். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி சான்று பெறுவதற்கான சாத்தியங்கள் திருப்தியளிப்பதாக குழுவினர் தெரிவித்தனர். நிறுவனங்களுக்கு சான்றுகள் கிடைக்கும்போது இதன் மூலம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • ரஷ்யா - உக்ரைன் போர் 15 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
    • பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    திருப்பூர் :

    ரஷ்யா - உக்ரைன் போர் 15 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர்சூழல் மாறாததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை பின்பற்றி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நடக்கும் போர் வணிக தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் அந்நாடுகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் திருப்பூரும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. பஞ்சு - நூல் விலை, மின்சாரம், தொழிலாளர் என அனைத்து வகை கட்டமைப்பு வசதிகளுடன் பின்னலாடை தொழில் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

    இருப்பினும் இறக்குமதி நாடுகளில் சில்லரை விற்பனை முடங்கும் நிலையில் இருப்பதால் திருப்பூரில் இருந்து அனுப்பிய ஆடைகள் தேக்க மடைந்துள்ளன.கிடங்கில் இருந்து சரக்கு பெறப்படாமலும் இருக்கிறது. இதனால் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் துவங்கிய பாதிப்பில் இருந்து திருப்பூர் முழுமையாக மீளவில்லை. நூல் விலை உயர்வை சமாளித்த வர்த்தகர்கள், மீண்டும் சோதனையை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆர்டர் வரத்து குறைந்துள்ளதால் திருப்பூரின் அடுத்த நகர்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இக்கட்டான இந்நிலையில் கொரோனா காலத்தில் வழங்கியது போல் மத்திய அரசு சார்பில் கடன் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம் கூறியதாவது :- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நூல் விலை உயர்வுக்கு பிறகு ஏற்பட்ட சரிவு இதுவரை சரியாகவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.குளிர்கால ஆர்டர் புக்கிங் முடிந்த நிலையில் திருப்பூருக்கான ஆர்டர்கள் 40 சதவீதம் வரை குறைந்து போக வாய்ப்புள்ளது. விசாரணை இருந்தும், ஆர்டர் உறுதியாகவில்லை. குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் திகைத்துப்போயுள்ளன.

    ஊரடங்கு நேரத்தில் மத்திய அரசு சலுகை வழங்கி காப்பாற்றியது. நிலுவையில் உள்ள வங்கிக்கடனில் 30 சதவீதம் கூடுதல் கடன் வழங்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் கூடுதல் கடன் வழங்க வேண்டும். மேலும் 6 மாத காலத்துக்கு கடன் மீதான வட்டி மற்றும் தவணை செலுத்துவதில் இருந்தும் சிறப்பு சலுகை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஜூன் மாதம் துவங்கிய பாதிப்பில் இருந்து திருப்பூர் முழுமையாக மீளவில்லை. நூல் விலை உயர்வை சமாளித்த வர்த்தகர்கள் மீண்டும் சோதனையை எதிர்கொண்டுள்ளனர்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயத்த ஆடைகளை தயாரித்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல் மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கன்டெய்னர் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்தது. துறைமுக ஊழியர்கள் விடுப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாகவும், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்ததாலும் கன்டெய்னர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன்காரணமாக கன்டெய்னர் கட்டணமும் பலமடங்கு உயர்ந்தது. இதனால் திருப்பூரில் இருந்து ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும், வெளிநாட்டினர் இறக்குமதி செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமடங்கு கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்தநிலையில் தற்போது கன்டெய்னருக்கான கட்டணம் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் கட்டணம் இருந்தது. தற்போது 4 ஆயிரம் டாலராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோல் ஐரோப்பிய நாடுகளுக்கான கன்டெய்னர் கட்டணம் 9 ஆயிரம் டாலரில் இருந்து 4,500 டாலராக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பஞ்சு விலை குறைவு, நூல் விலை குறைவு காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ள நிலையில் சரக்குகளை அனுப்பி வைக்கும் கன்டெய்னர் கட்டணமும் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது.
    • அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்கள், சிறுவர்களுக்கான டிரவுசர், ஓவரால், ஷார்ட்ஸ், புல்ஓவர், டி-சர்ட், பெண்களுக்கான டிரவுசர், ஜாக்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வருகிற அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்க ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.டென்மார்க் நாட்டின் இறக்குமதியில் பின்னலாடை ரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாட்டில் நடைபெற உள்ள வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 2232634 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
    • இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.

    இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

    இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.

    திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

    ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

    ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×