search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு
    X

    இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு

    இந்திய பொருளாதாரம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
    தனாங்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனா, தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் 2 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ள டிரம்ப், அங்குள்ள தனாங் நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கு இடையே அங்கு நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், இந்தியாவின் வளர்ச்சி குறித்து புகழ்ந்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த குழுவுக்கு வெளியே உள்ள நாடுகள் கூட இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான புதிய அத்தியாயத்தின் மிகப்பெரிய கரங்களை கொண்டிருக்கின்றன. குறிப்பாக தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்தியா, 130 கோடி மக்கள் தொகையுடன் இறையாண்மை ஜனநாயக நாடாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் அது திகழ்கிறது.

    இந்தியா தனது பொருளாதாரத்தை திறந்ததில் இருந்து, பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன் விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உலக அளவிலான புதிய வாய்ப்புகள் உள்ளன.

    பரந்து விரிந்த இந்திய நாட்டையும், அதன் அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பதற்கு பிரதமர் மோடி உழைத்து வருகிறார். உண்மையில் இந்த பணியில் அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்கிறார்.



    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    இந்தோ-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிலிப்பைன்ஸ் செல்கிறார். கிழக்கு ஆசிய மாநாட்டில் டிரம்பும் பங்கேற்கும் நிலையில், இந்தியாவையும், பிரதமர் மோடியையும் அவர் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளையும் டிரம்ப் பாராட்டினார்.
    Next Story
    ×