search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தொழிலாளியை கொன்ற வழக்கில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து
    X

    பாகிஸ்தான் தொழிலாளியை கொன்ற வழக்கில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் தொழிலாளியை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    அல் அய்ன்:

    ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உட்பட்ட அபுதாபி அருகே அல் அய்ன் பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர். இங்கு இருந்த பாகிஸ்தான் தொழிலாளி ஒருவர் கடந்த 8-12-2015இன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    கொலையான முஹம்மது பர்ஹான் என்பவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 11 பேருக்கும் கள்ள மது தயாரிப்பத்தில் ஏற்பட்ட சண்டையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பான வழக்கு அமீரக அல் அய்ன் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் கைதான 11 பேரில், 10 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் 11 பேரும் சேர்ந்து 2 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.36 லட்சத்து 71 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள், அபுதாபியில் உள்ள கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இந்திய தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்ற இங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் பெருமுயற்சி செய்து வந்தது. அராபிய நாட்டு சட்டங்களின்படி, கொலையானவரின் உறவினர்கள் குற்றவாளிகளை மன்னித்து விட்டால் அவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பிப் பிழைக்க முடியும்.

    அதன்படி, இந்தியாவை சேர்ந்த அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு சென்றனர். கொலையான முஹம்மது பர்ஹானின் தந்தையான முஹம்மது ரியாஸ் என்பவரை சந்தித்து தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் பத்து பஞ்சாபியர்களின் உயிரை காப்பாற்ற உதவுமாறு அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

    இறந்த பர்ஹானின் உயிருக்கு இழப்பீடாக பணம் கொடுப்பதற்கு தங்களது தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, மனமிறங்கிய முஹம்மது ரியாஸ், குற்றவாளிகள் பத்துபேரையும் மன்னிக்க தீர்மானித்தார்.

    பாகிஸ்தானில் இருந்து முஹம்மது ரியாஸ் அங்கு வருவதற்கான விசா, விமான கட்டணம், தங்கும் செலவு போன்றவற்றையும் அந்த தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

    பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் அல் அய்ன் நகருக்கு வந்த அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது முடிவினை நீதிபதியிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த பாவ மன்னிப்புக்கு (ரத்தப் பணம்) 2 லட்சம் திர்ஹம்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 35 லட்சம் ரூபாய்) இழப்பீடாக பெற்று கொள்ள சம்மதித்திருப்பதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

    அல் அய்ன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முஹம்மது ரியாஸ், அவசரத்தில் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு யாரும் குற்றவாளிகள் ஆவதில் எனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார்.

    என்னுடைய மகனை நான் இழந்தது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சண்டைகளில் ஈடுபட வேண்டாம் என்று இளைய தலைமுறையினரை கேட்டுக் கொள்கிறேன். என் மகனின் இறப்புக்கு காரணமான அந்த பத்துப் பேரையும் நான் மன்னித்து விட்டேன்.

    உண்மையை சொல்லப் போனால் அல்லாஹ் அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். பத்து பேரின் உயிர்களை மட்டுமல்ல, வெளிநாட்டில் பிழைக்க வந்து அநியாயமாக உயிரை விடுவதால் பாதிக்கப்படும் அவர்கள் பத்து பேரின் மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுள்ளது என முஹம்மது ரியாஸ் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அவரது மன்னிப்பை ஏற்றுகொண்ட அல் அய்ன் நீதிமன்றம் மேற்படி பத்து இந்தியர்களின் மரண தண்டனையை ரத்துசெய்து தற்போது உத்தரவிட்டுள்ளது. பத்து இந்தியர்களில் இருவரின் மரண தண்டனையை மூன்றரை ஆண்டு சிறை தண்டனையாகவும், மீதி எட்டு பேரின் மரண தண்டனையை மூன்றாண்டு சிறை தண்டனையாகவும் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைப்பட்டு கிடப்பதால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட இருவர் மட்டும் ஒன்றரை ஆண்டுக்கு பின்னரும், மீதி எட்டு பேர் இன்னும் ஓராண்டுக்கு பின்னரும் சிறையில் இருந்து விடுதலை ஆவார்கள்.

    அரபு நாட்டு சட்டங்களின்படி சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆகும் குற்றவாளிகள் உடனடியாக நாடு கடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இவர்கள் பத்து பேரும் விடுதலையாகும்போது, அங்குள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் விமான டிக்கெட் அளிக்கப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×