search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் இடி- மின்னலுடன் கனமழை
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் இடி- மின்னலுடன் கனமழை

    கோவை மற்றும் திருப்பூர், நீலகிரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை நகரில் கடந்த 3 நாட்களாக வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு லேசான மழை பெய்ய தொடங்கியது.

    இரவு 7 மணி முதல் இடி- மின்னலுடன் கன மழையாக மாறி வெளுத்து கட்டியது. மழை காரணமாக டவுன்ஹால், ரெயில் நிலையம் சாலை, லங்கா கார்னர், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவினாசி மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அரசு மருத்துவமனை முதல் கட்டிட வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவை லங்கா கார்னர் அருகே ஒரு வேன் மழை வெள்ளத்தில் சிக்கி நின்றது. அங்கிருந்த பொதுமக்கள் வேனில் இருந்த 2 பேரை மீட்டனர்.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டா முத்தூர், பெரிய நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர் , பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது.

    இரவில் பெய்த மழை காரணமாக கடுங்குளிர் நிலவியது.

    மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் 4-வது வால்வை தொடும் நிலையில் நீர்மட்டம் உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோவை தெற்கு-92

    ஏர்போர்ட்-15.60

    மாவட்டத்தில் மொத்தம் 592.60 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 49.38 -ம் பதிவாகியுள்ளது.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக திருப்பூர் பார்க் ரோடு, ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, புஷ்பா ரவுண்டானா, கொங்கு மெயின் ரோடு, ஸ்ரீநகர், பிச்சம்பாளையம்புதூர், அவினாசி ரோடு உள்பட பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புது பஸ் நிலையம் பகுதியில் சாக்கடை கால்வாயில் மழை வெள்ளம் நிரம்பி ரோட்டில் ஓடியது. இதனால் வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் இதைபோல் உடுமலை, தாராபுரம், அவினாசி, காங்கேயம், பல்லடம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை 7 மணி வரை 60.13 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    திருப்பூரில் 55.50 மில்லி மீட்டர், அவினாசி 62 மில்லிமீட்டர், பல்லடம் 54மில்லி மீட்டர், காங்கேயம் 7.4மில்லிமீட்டர், தாராபுரம் 95 மில்லிமீட்டர், முலனூர் 51 மில்லி மீட்டர், உடுமலை 96 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் , கோத்தகிரி, கொடநாடு உள்ளிட்ட பகுதியில் இரவில் லேசான சாரல் மழை உள்ளது.

    Next Story
    ×