search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    பிரிஸ்டல்:

    11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நடந்த முதலாவது அரைஇறுதியில் மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. லிசெல் லீ 7 ரன்னிலும், திரிஷா ஷெட்டி 15 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்த், மிக்னன் டு பிரீஸ் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனாலும் இங்கிலாந்தின் பந்து வீச்சை அதிரடியாக நொறுக்க முடியவில்லை. இதனால் ஸ்கோர் வேகம் சீராகவே இருந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது. வோல்வார்த் (66 ரன்), மிக்னன் டு பிரீஸ் (76 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். கேப்டன் வான் நீகெர்க் (27 ரன்) ரன்-அவுட் ஆனார்.

    அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் வின்பீல்டு (20 ரன்), பியூமோன்ட் (15 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் சாரா டெய்லரும், கேப்டன் ஹீதர் நைட்டும் அணியை தூக்கி நிறுத்தினர். ஸ்கோர் 139 ரன்களை எட்டிய போது எதிர்பாராதவிதமாக இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிய இங்கிலாந்துக்கு சிக்கல் உருவானது. சாரா டெய்லர் 54 ரன்களிலும் (76 பந்து, 7 பவுண்டரி), ஹீதர் நைட் 30 ரன்களிலும் அடுத்து வந்த நதாலி ஸ்சிவர் 3 ரன்னிலும், புருன்ட் 12 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

    அப்போது இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது. இதன் பின்னர் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த பிரான் வில்சனும், ஜெனி குனும் இணைந்து அணியை 200 ரன்களை கடக்க வைத்தனர். இலக்கை நெருங்கிய சமயத்தில் பிரான் வில்சன் (30 ரன்) கேட்ச் ஆக, மறுபடியும் இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது.

    பரபரப்பான கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. 50-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சப்னிம் இஸ்மாயில் வீசினார். முதல் 3 பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த அவர் லாரா மார்ஷின் (1 ரன்) விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 3 பந்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தை எதிர்கொண்ட சிரப்சோலே அதை பவுண்டரிக்கு விரட்டி திரில்லிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெனி குன் 27 ரன்களுடனும், சிரப்சோலே 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 17 வைடு உள்பட 25 ரன்களை வாரி வழங்கினர். தோல்விக்கு அதுவும் முக்கிய காரணமாகும்.

    நாளை நடக்கும் 2-வது அரைஇறுதியில் இந்தியா-நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணியை 23-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சந்திக்கும். 
    Next Story
    ×