search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தலில் காங். பிரசாரத்தை தடுக்க கிராமங்களில் ‘மோடி படை’
    X

    குஜராத் சட்டசபை தேர்தலில் காங். பிரசாரத்தை தடுக்க கிராமங்களில் ‘மோடி படை’

    குஜராத்தின் கிராமப்பகுதிகளில் காங்கிரசின் பிரசாரத்தை தடுக்க பாரதிய பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மோடி படை அமைக்கப்பட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான பா.ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத்தில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி பிரதமரானதும் அவருக்கு பதில் ஆனந்த் பென் பட்டேல் முதல்-மந்திரி ஆனார். அவரது ஆட்சியில் பட்டேல் இனத்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இட ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டம் நடத்தினார்கள்.

    இதில் பெருமளவில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தை சரிவர சமாளிக்கவில்லை என்று கூறி ஆனந்தி பென் பட்டேல் முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் விஜய்ரூபானி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். குஜராத் சட்டசபையின் பதவி காலம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்-மந்திரிகள் இருந்துள்ளனர்.

    மோடி பிரதமர் ஆனது குஜராத் மக்களுக்கு பெருமை என்றாலும் உள்ளூர் பிரச்சினைகள், இட ஒதுக்கீடு போராட்டங்களால் பா.ஜனதா அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் அரசுக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளது.

    மோடியின் சொந்த மாநிலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எப்போதும் இல்லாத அளவுக்கு குஜராத்தில் முகாமிட்டு தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.



    ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் பட்ட அவதியையும், ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எடுத்து கூறி வருகிறார். இது பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா குஜராத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முன் நின்று கவனித்து வருகிறார். ராகுல் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்து வருகிறார்.

    இதற்கிடையே குஜராத்தின் கிராமப்பகுதிகளில் காங்கிரசின் பிரசாரத்தை தடுக்க பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மோடி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ளூர் இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு கிராமத்தில் பிரசாரம் செய்ய வாய்ப்பு அளிக்க முடியாதபடி இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

    கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்களை மோடி படையில் சேர்த்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு கிராமங்களில் பிரசாரத்துக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மோடியை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கள் கிராமத்தில் பிரசாரம் செய்ய இடம் இல்லை என்று கூறி தடை விதித்துள்ளனர்.

    இதன் மூலம் பா.ஜனதா அரசு மீது எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு அலை கிராமங்களில் பரவாமல் தடுக்க முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தளர். அவர்கள் மேலும் கூறியதாவது:-

    பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை பலவீனப்படுத்தும் வகையில் வாக்களிக்க மாட்டார்கள். கிராமங்களில் மக்களே மோடி படையை உருவாக்கி செயல்படுகிறார்கள். அந்த கிராமங்களுக்குள் ராகுல் காந்தியும் அவரது கட்சி தலைவர்களும் உள்ளே நுழைய முடியாது.

    குஜராத்துக்காரர் பிரதமராக இருப்பது குஜராத் மக்களுக்கு பெருமை. அதை பலவீனப்படுத்தும் முடிவு எடுக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×