search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் தீவிரவாதி தப்பிக்க ரூ.45 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஐ.ஜி.: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
    X

    உ.பி.யில் தீவிரவாதி தப்பிக்க ரூ.45 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஐ.ஜி.: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

    உத்தரபிரதேசத்தில் தீவிரவாதி தப்பிக்க ரூ.45 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஐ.ஜி.யிடம் விசாரணை நடத்த அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க பாபர் கல்சா இண்டர் நே‌ஷனல், காலிஸ்தான் விடுதலைப் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த அமைப்புகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள நபா என்ற ஜெயிலில் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந்தேதி திடீரென்று 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். இவர்கள் காலிஸ்தான் விடுதலைப்படையை சேர்ந்த ஹர்மீந்தர் மிண்டோ, கோபி கன்ஷியாம் புரா உள்பட 6 பேரை ஜெயிலில் இருந்து தப்பவைத்தனர்.

    மறுநாள் டெல்லி ரெயில் நிலையம் அருகே ஹர்மீந்தர் மிண்டோ கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகளை தப்பிக்க வைத்தவர்களில் முக்கிய குற்றவாளியான பர்வந்தேர்சிங், உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஷாம்லி மற்றும் முசாபர் நகர் மாவட்டங்களில் உத்தர பிரதேச அதிரடிப்படையினருடன் பஞ்சாப் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சமீபத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான் பூரில் கடந்த 10-ந்தேதி மாநில அதிரடிப்படையிடம் காலிஸ்தான் தீவிரவாதி கோபி கன்ஷியாம் பிரா சிக்கியதாகவும், போலீஸ் ஐ.ஜி. ஒருவர் ரூ.45 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை தப்பவிட்டதாகவும் தெரிவித்தனர்.

    லக்னோ பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஐ.ஜி.யிடம் பேரம் நடத்தப்பட்டு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைத் தரகராக ஐ.ஜி.யின் உறவினரும் சுல்தான் பூர் பகுதி காங்கிரஸ் பிரமுகருமான சந்தீப் திவாரி செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் சந்தீப் திவாரி உள்ளிட்ட 3 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் ரூ.45 லட்சம் லஞ்சப்புகாரை விசாரிக்க உத்தரபிரதேச அரசுக்கு பஞ்சாப் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளளர்.

    இந்த கடிதம் தொடர்பாக உத்தரபிரதேச டி.ஜி.பி. சுல் கான்சிங், உள்துறை முதன்மை செயலாளர் அரவிந்த்குமார் ஆகியோருடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் லஞ்சப்புகார் தொடர்பாக டி.ஜி.பி. தலைமையிலான குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×