மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி- அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா வீராங்கனை (கோப்பு படம்)
தென் ஆப்பிரிக்கா வீராங்கனை (கோப்பு படம்)
Published on

கிறிஸ்ட்சர்ச்:


12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின. 

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. 

அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.  தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப்டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ‌ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர். 

இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா பின்னர் விளையாடியது.  50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.  

அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 80 ரன்கள் குவித்தார்.  மற்றொரு வீராங்கனை மிக்னான் டு ப்ரீஸ் 52 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.  

இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.  பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com