அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம்: சாதனை படைத்த போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இத்தாலி ஜோடியை வீழ்த்தி போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம்: சாதனை படைத்த போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
Published on

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி-ஆன்ரீயா வவாசோரி ஜோடியைச் சந்தித்தது.

பரபரப்பாக நடந்த போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெற்றிபெற வயது ஒரு தடையில்லை என்பதை ரோகன் போபண்ணா மீண்டும் மீண்டும் காட்டுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள். எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது. ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்ற ரோகன் போபண்ணாவுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தளராத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நீங்கள் ஒரு சர்வதேச சின்னம் ஆக உருவாகி இருக்கிறீர்கள். முரண்பாடுகளை தகர்த்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்துள்ளீர்கள். உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஆஸ்திரேலியா ஓபன் 2024ல் மேத்யூ எப்டனுடன் இணைந்து நமது ரோகன்போபண்ணா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறிய ரோகனுக்கு எனது வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com