காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதல் போட்டியில் நிருபமா தேவி ஏமாற்றம்

க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் ஒருமுறை கூட வெற்றிகரமாக பளு தூக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
Nirupama Devi
நிருபமா தேவி
Published on

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று இரவு பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி கலந்து கொண்டார்.

பளுதூக்குதல் ஸ்னட்ச் (Snatch) மற்றும் க்ளீன் & ஜெர்க் (Clean & Jerk) ஆகிய இரண்டு முறைகளில் நடைபெறும். இரண்டையும் சேர்தது அதிக பளுதூக்கும் நபர் வெற்றி பெறுவார்.

ஸ்னட்ச் முறையில் 93 கிலோ

ஸ்னட்ச் முறையில் நிருபமா தேவி முதல் முயற்சியில் 93 கிலோ எடையை தூக்க முயன்றார். ஆனால், தோல்வியடைந்தார். ஆனால், 2-வது முயற்சியில் 93 கிலோ பளுவை தூக்கினார். பின்னர் 95 கிலோ தூக்கும்போது தோல்வியடைந்தார். இதனால் ஸ்னட்ச் முறையில் 93 கிலோ பளுவை பதிவு செய்தார். இவரை விட நான்கு பேர் அதிக பளு தூக்கினர்.

க்ளீன் & ஜெர்க் முறையில் ஏமாற்றம்

ஆனால், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்தது. இந்த வருடம் தொடக்கத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 127 கிலோ பளு தூக்கி அசத்தியிருந்தார். இதனால் 123 கிலோ பளுவை தூக்க முயற்சி செய்தார். ஆனால், அவரால் இந்த பளுவை தூக்க முடியாமல் தோல்வியடைந்தார். மூன்று முறையில் அவரால் தூக்க இயலவில்லை. இதனால், போட்டியை முடிக்கவில்லை (Did Not Finish) என்பதுடன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்ற பட்டியலில் இருந்தவர் நிருபமா தேவி ஆவார். தற்போது ஏமாற்றத்துடன் போட்டியை முடித்துள்ளார்.

கனடா வீராங்கனை தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கனடாவின், மவுடே சரோன் (102+122 கிலோ) தங்கப்பதக்கம் வென்றார். இவர் தொடர்ந்து 3-வது முறையாக காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா டேவிஸ் ஸ்மேல் 217 கிலோ (95+122 கிலோ) தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். நவூரு நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை பெமிலி கிறிஸ்டி நோட்டே வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com