

இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய சீனியர் அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக அவர் வரலாறு படைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது வயதையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு, அவருடன் அவரது பெற்றோர்களும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அவரது பெற்றோரின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளையும் பிசிசிஐ ஏற்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் அவருடன் அவரது பெற்றோர்களும் தங்கி பயணிக்க பி.சி.சி.ஐ. சிறப்பு அனுமதி மற்றும் ஆதரவை வழங்கியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த இடதுகை தொடக்க ஆட்டக்காரரான வைபவ், ஐபிஎல் 2026 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். சூர்யவன்ஷி ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடி 1 சதம், 5 அரை சதத்துடன் 776 ரன்கள் குவித்தார். இதனால், இந்திய அணியில் விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியதுடன், தொடரின் சிறந்த வீரர் விருதையும் வென்றார்.
அவரது சமீபத்திய சிறப்பான ஆட்டங்களின் அடிப்படையில் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள வைபவ், இந்திய ஆண்கள் மூத்த அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைய வீரர்களில் ஒருவராக வரலாறு படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிசிசிஐ வழங்கியுள்ள இந்த சிறப்பு ஆதரவு, இளம் திறமைகளை பாதுகாத்து வளர்க்கும் வாரியத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.