

2026 FIFA கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் சர்ப்ரீத் சிங், ஒட்டுமொத்த இந்திய மற்றும் பஞ்சாபி சமூகத்தினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே களம் காணும் முதல் சீக்கிய வீரர் என்ற பெருமையைப் பெற்று அவர் புதிய வரலாறு படைக்கவுள்ளார்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிறந்த சர்ப்ரீத் சிங்கின் பெற்றோர் பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 7 வயதிலிருந்தே கால்பந்து விளையாடத் தொடங்கிய இவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடித் தனது திறமையை நிரூபித்தார். 2019-ஆம் ஆண்டில் உலகின் புகழ்பெற்ற "பேயர்ன் மியூனிக்" கிளப் அணியில் இணைந்து, ஜெர்மனியின் உயரிய 'பூண்டெஸ்லிகா' தொடரில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
2018-ல் மும்பையில் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களுக்கு அசிஸ்ட் செய்து இந்தியக் கால்பந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயம் காரணமாக, அவர் உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது.
ஆனால், தீவிரப் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் ஏப்ரல் மாதமே களத்திற்குத் திரும்பிய அவர், நியூசிலாந்தின் 26 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்தார். தற்போது 27 வயதாகும் சர்ப்ரீத் சிங், நியூசிலாந்து தேசிய அணிக்காக இதுவரை 24 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 3 கோல்களை அடித்துள்ளார்.
இதுகுறித்து சர்ப்ரீத் சிங் கூறுகையில், "உலகக்கோப்பையில் விளையாடும் முதல் சீக்கிய கால்பந்து வீரர் நான் தான் என்று பலரும் என்னிடம் கூறினர். எனது கலாச்சாரத்தையும் மக்களையும் உலக மேடையில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகுந்த பெருமையும் பொறுப்பும் கொள்கிறேன். இது அடுத்த தலைமுறை இந்தியக் குழந்தைகள் உலக அரங்கிற்கு வர ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன். என்றார்.
"குரூப் 'G' பிரிவில் பெல்ஜியம், ஈரான் மற்றும் எகிப்து போன்ற வலுவான அணிகளுடன் நியூசிலாந்து மோதவுள்ளது. நியூசிலாந்து தனது முதல் லீக் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணிக்காக இவர் விளையாடினாலும், இந்திய வம்சாவளி வீரர் என்பதால் இந்திய ரசிகர்களின் ஆதரவும் இவருக்குப் பெருகி வருகிறது.