

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றது.
இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் வகையில், கிளாஸ்கோ நகரில் உள்ள 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா' என்ற உணவகத்திற்கு இந்திய வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.
கிளாஸ்கோவில் மிகவும் பிரபலமான 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா' உணவகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் பலர் வந்து செல்லும் உணவகமாகும்.
நேற்று 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைனும் சென்றுள்ளார்.
உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் மற்றும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.
இது குறித்து லவ்லினா அங்கு பேசிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
அதில் அவர், "தயவுசெய்து இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதைப் பார்த்தபோது எனக்குச் சற்று மனவருத்தமாக இருந்தது.
இந்த இந்திய வரைபடத்தில் எங்கள் வடகிழக்குப் பகுதியைக் காணவில்லை. வெளியிலும் வடகிழக்கு பகுதி நீக்கப்பட்ட வரைபடமே வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் இது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. அடுத்த முறை இதைக் கவனத்தில் கொள்ளுங்கள், நன்றி." என சுட்டிக்காட்டினார்.
இது குறித்து இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் அளித்த பேட்டியில், "உணவக நிர்வாகத்துடன் எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ ஏற்படவில்லை. நானும் லவ்லினாவும் அந்தத் தவறான வரைபடத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.
உணவக நிர்வாகத்தினர் உடனடியாகத் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, வரைபடத்தை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.