

பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் 4 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். உலகின் மிகப்பெரிய பெடரேசனாக பிபா விளங்கி வருகிறது. முன்னதாக 32 அணிகள் பங்கேற்று விளையாடின. 2026 உலக கோப்பையில் 48 அணிகள் பங்கேற்று விளையாடின.
குட்டி அணிகள் பங்கேற்பதால் போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது என விமர்சிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பையில் குட்டி அணிகள் எல்லாம் பெரிய பெரிய அணிகளுக்கு சவால் விடுத்தன.
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அர்ஜென்டினாவுக்கு கேப் வெர்டே அணி கடும் சவால் கொடுத்தது. இறுதியாக அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்று நூழிலையில் தப்பித்தது. கோர்சாவ், ஐவரி கோஸ்ட், டி.ஆர். காங்கோ போன்ற அணிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.
இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
அடுத்த உலக கோப்பை (2030) ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. பிஃபா-வின் உலக கோப்பை தொடர் தொடங்கி 100 வருடம் என்ற சிறப்புமிக்க பெருமையை கொண்டாடும் வகையில் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவேயில் ஒரு போட்டி நடைபெற இருக்கிறது.
2030 உலக கோப்பையில் 64 அணிகள் சேர்க்கலாம் என பிபா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவும் செய்துள்ளது. தற்போது இது தொடர்பான ஆவணங்கள் கசிந்துள்ளன. இதனடிப்படையில் பிபா, 64 அணிகளாக விரிவாக்கம் செய்யும் எனத் தெரிகிறது.
64 அணிகள் பங்கேற்றால், போட்டிக்கான காலம் மிகப்பெரிய அளவில் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், குரூப் போட்டிகளை ஒரு நாளில் அதிக அளவில் நடத்த வேண்டும்.
எப்படி இருந்தாலும் பிஃபா-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் 64 அணிகளா? அல்லது தொடர்ந்து 48 அணிகள் பங்கேற்குமா? என்பது தெரியவரும்.