

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற, மற்ற மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், 5-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களை குவித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஹென்றி நிகிகோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய வில் யங், 3-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிக் கெல்லியுடன் இணைந்து அபாரமாக ஆடினார்.
இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. மேலும், இருவரும் அரைசதம் கடந்தனர். வில் யங் (56), நிக் கெல்லி (64) எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கியவர்களில் டாம் லேதம் (69) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை குவத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய விடெல் லாவ்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்ட், ஜேடென் சீல்ஸ் மற்றும் குடகேஷ் மோத்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.