

ஐ.பி.எல். 2026 சீசன் கடந்த ஞாயிறன்று முடிவடைந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக ஆர்.சி.பி. சாம்பியன் பட்டம் வென்றது. 15 வயதான சூர்வயன்ஷி 700 ரன்களுக்கு மேல் குவித்து தொடர் நாயகன் உள்ளிட்ட 5 விருதுகளை தட்டிச் சென்றார்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், சூர்யவன்ஷி, விராட் கோலியை சுயநலவாதி என்று கூறுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் பிரபல வர்ணனையாளரான ஹர்சா போக்லே, சூர்யவன்ஷியிடம் கேள்வி கேட்பார். அப்போது அவர் பதில் அளிக்கும் வகையிலான வீடியோ வெளியானது.
அதில், செயற்கை நுண்ணறிவு உலகில், டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்குவது மிகவும் சுலபமான காரியமாகிவிட்டது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது.
அந்தக் காணொளியில், சூர்யவன்ஷி விராட் கோலியை "மெதுவானவர் (மெதுவாக விளையாடுபவர்)" என்றும் "சுயநலவாதி" என்றும் அழைப்பது காணப்படுகிறது.
புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, கோலியைப் போல ஒரு "ராஜா" ஆக விரும்புகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்குப் பிறகு, சூர்யவன்ஷி இவ்வாறு பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த வீடியோ முழுவதும் போலியானது.
இது தொடர்பாக ஹர்சா போக்லே தனது எக்ஸ் பக்கத்தில் “நானும் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெறும் ஒரு போலியான, குரல் மாற்றப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், வைபவ் மிகவும் முரட்டுத்தனமாகவும் ஆணவத்துடனும் நடந்துகொள்வது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அத்தகைய கேள்வியும் கேட்கப்படவில்லை; அதுபோன்ற பதிலும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, இதுவரை நடைபெற்ற சில உரையாடல்களிலேயே மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்ட ஒரு இளம் வீரரைப் பொறுத்தவரை, இத்தகைய செயல் மிகவும் கொடுமையானதும் விஷமத்தனமானதும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.