தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய தமிழகம் வருவதால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 30-ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் திருப்பூர், கோவை, கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து தாராபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநில தலைவரும் வேட்பாளருமான எல்.முருகன் முன்னின்று செய்து வருகிறார்.

பிரசார கூட்டத்திற்காக தாராபுரம் உடுமலைரோடு ஜீவா காலனி பகுதியில் 63 ஏக்கரிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொதுக்கூட்ட மேடை மற்றும் பல்வேறு பணிகளை தொடங்குவதற்காக கால்கோள் விழா நாளை நடக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைக்கின்றனர்.

பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சமதளமாக்கப்படுகிறது. அதன்பிறகு மேடை, பந்தல் அமைக்கப்பட உள்ளது.

இதனிடையே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லியில் இருந்து வருகை தர உள்ளனர். அவர்கள் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனையும் நடத்துகின்றனர். அதன்பிறகு பிரதமரின் பிரசார திட்டம் வகுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com