

போடி:
தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் அவரை எதிர்த்து தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். மேலும் அ.ம.மு.க., நாம்தமிழர், சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கடும் போட்டி நிலவி வருவதால் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களும் அதிகாலை முதல் இரவு வரை கிராமம் கிராமமாக சென்று நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வயல்களில் வேலை செய்யும் பெண்களிடம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டும், தொழிலாளர்களிடம் அவர்கள் செய்யும் பணியை தான் செய்தும் பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி இஸ்திரி போடும் தொழிலாளியிடம் அந்த பெட்டியை வாங்கி துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் உணவகங்களுக்கு சென்று பூரி சுட்டும், தோசை சுட்டும் வாக்கு கேட்டு வருகிறார். இவரின் இந்த செயல்பாடை பார்த்து அந்த இடத்தில் மக்கள் கூடி விடுவதால் அவர்களிடம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.