30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதே தொகுதியைச்சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆவது இதுவே முதல் முறை ஆகும்.
மு.பெ.சாமிநாதன்
மு.பெ.சாமிநாதன்
Published on

காங்கேயம்:

தி.மு.க. அமைச்சர்கள் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படதொழில்நுட்பவியல், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், அப்போது இருந்த வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இதுவரை காங்கேயம் தொகுதியில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில்லை. அதேபோல அ.தி.மு.க.விலும், காங்கேயம் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காங்கேயம் மற்றும் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதியை சாராத ஆர்.எம்.வீரப்பன் காங்கேயத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கேயம் தொகுதியைச் சேர்ந்த மு.பெ.சாமிநாதன் அமைச்சராக அறிவிக்கப்பட்டது தொகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com