

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-வுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக சர்வதேச அணியில் இடம் பிடித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அங்கு கேப்டனாக முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். அடுத்த சீசனில் 2-வது இடம் பிடித்தது.
அதன்பின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். 2025 சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அடைந்தது. அவருக்கு சக வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதிலும் கேப்டனாக நீடித்தார்.
இந்த (2026) சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஜொலிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. வீரர்கள் அறைகளில் பேசக்கூடிய ரகசிய பேச்சுகள் வெளியாகின.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல விரும்புவதாக தெரிகிறது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
அதேவேளையில் ஜெய்ஸ்வாலை இழுக்க மும்பை இந்தியன்ஸ் விரும்புகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேச விரும்புகிறது.
ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விலகிய பின், தனக்கு அணியில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கை கேப்டனாக நியமித்தது. மேலும், சூர்யவன்ஷி தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை தங்கள் பக்கம் திருப்பினார்.
இதனால் ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விரும்பலாம். இதனால் இந்த டீல் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது.