

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால், அடுத்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 13 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை மெக்கேவில் கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,
பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் இது 13 வீரர்கள் கொண்ட அணியாக இருந்தாலும், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்காகத் தயாராக வீரர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் சமீபத்திய டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற அணியிலிருந்து மைக்கேல் நெசர், டாட் மர்பி மற்றும் பிரெண்டன் டோகெட் ஆகியோர் நீக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், வங்கதேசம் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.