

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் ஆடுகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தர்மசாலாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். லோகேஷ் ராகுல், இஷான் கிஷனும் கணிசமான பங்க ளிப்பை அளித்தனர். 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில பரிசோதனை முயற்சி தொடரும் என கில் அறிவித்து இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
இதே போல் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. ஆடுகளத்தன்மையை பார்த்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தீர்மானிப்போம் என்று இந்திய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே தெரிவித்தார். மொத்தத்தில் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கும் முனைப்புடன் நமது வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் ரமனுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தும் பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை இன்னும் ஒரு முறை கூட வீழ்த்திடாத ஆப்கானிஸ்தான் அந்த வரலாற்று சாதனைக்கான முயற்சியை இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா: ரோகித் சர்மா அல்லது ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, குர்னூர் பிரார். குல்தீப் யாதவ் அல்லது பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ். இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா அடல், ரக்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்). அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித்கான், கசன்பார். முகமது சலீம், ஜியாவுர் ரகுமான்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.