

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்கவெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.
போட்டியின் தொடக்கத்தில் 8.09 மீட்டர் தூரம் தாண்டிய ஸ்ரீசங்கர், முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார்.
ஆனால் 4வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெயில் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.
ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்சி8.08 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக முழங்காலில் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஸ்ரீசங்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
தீவிரப் பயிற்சிகளுக்குப் பின் கம்பேக் கொடுத்த அவர், காமன்கவெல்த் நீளம் தாண்டுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீசங்கரின் தந்தை முரளி மற்றும் தாய் பிஜிமோல் ஆகிய இருவருமே தடகள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் பேசுகையில், "எல்லோரும் எப்போதும் தங்கப் பதக்கத்தையே இலக்காகக் கொண்டு களமிறங்குகிறோம். வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சிதான் என்றாலும், திருப்தியளிக்கவில்லை.
ஏனெனில், இதைவிடச் சிறந்த செயல்திறனை நான் எதிர்பார்த்தேன். பர்மிங்ஹாம் தொடரில் வென்ற வெள்ளியைத் தங்கமாக மாற்ற வேண்டும் என்றே விரும்பினேன்.
ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்தித்த கடுமையான காயங்கள் மற்றும் சவால்களை தாண்டி, மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.