சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ்.. டெர்பை போட்டியில் சதம் விளாசி உணர்ச்சிவசம்

இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களையும் நான் நேசிக்கிறேன்.
Ben Stokes emotional century, after announcing international retirement
Published on

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், டெர்பியில் நடைபெற்ற ஒருநாள் கோப்பை போட்டியில் 108 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்தில் டெர்பிஷயர் மற்றும் டர்ஹாம் உள்ளூர் அணிகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் டர்ஹாம் அணி பிரிவில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

அப்போது முதலில் பேட்டிங் செய்த டெர்பி அணி 49.1 ஓவர்களில் 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டர்ஹாம் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், 123 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார்.

இந்த ஓய்வு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு உணர்ச்சிப்பூர்வமான செய்தியைப் பகிர்ந்து, தனது பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு:

அவர் அந்த பதிவில், “கடந்த 15 ஆண்டுகள் மிகவும் பரபரப்பானதாக இருந்தன. களத்திலும் களத்திற்கு வெளியேயும், உச்சகட்ட மகிழ்ச்சி அதில் கலந்திருந்தன.

எனது நேரம் முடிந்துவிட்டது, அந்த முடிவை என்னைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது. ஆனால் இதற்கிடையில், இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த ஒவ்வொரு இங்கிலாந்து ரசிகர்களையும், ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களையும் நான் நேசிக்கிறேன்.

இங்கிலாந்துக்காகக் களத்தில் என்னுடன் பயணித்த ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நான் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் 15 ஆண்டுகளாக நான் செய்ததை எவ்வளவு நேசித்தேன் என்பதன் சாராம்சத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு ரசிகனாக இருந்து அணிக்கு ஆதரவளிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். குடும்பத்தினர், நண்பர்கள், சக வீரர்கள், ரசிகர்கள் என உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுருந்தார்.

ஸ்டோக்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 122 டெஸ்ட் போட்டிகளுடன் முடித்தார். இதில் 44 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 7,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கிலாந்து அணிக்காக 114 ஒருநாள் போட்டிகளிலும் 43 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com