கோட்சார குரு பார்வையால் விலகும் தோஷங்கள்

ஒருவர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் அவரை சத்ரு தோஷம் உருத் தெரியாமல் அழித்து விடும்.
கோட்சார குரு பார்வையால் விலகும் தோஷங்கள்
Published on

பல்வேறு விதமான சூட்சுமங்களை உள்ளடக்கியது ஜோதிடம். இதில் ராசிக்கு பலன் சொல்ல வேண்டுமா லக்னத்திற்கு பலன் சொல்ல வேண்டுமா தசாபுத்திக்கு பலன் சொல்ல வேண்டுமா கோச்சாரத்திற்கு பலன் சொல்ல வேண்டுமா என்ற பல்வேறு விதமான சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது. அதை போல் கோச்சார பலன் ராசிக்கா லக்கினத்திற்கா என்று கருத்து வேறுபாடு உள்ளது. இதுபோன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில் அனுபவமே ஜோதிடமாகும். தசா புத்திக்கு மிஞ்சிய பலன்கள் ஒரு ஜாதகருக்கு நடக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு.

தசா புக்திநாதருக்கு கோச்சார கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் ஏற்படும் நல்ல தீய விளைவுகள் ஜாதகருக்கு வாழ்வில் ஏற்ற இறக்கமான பலன்களை தருகிறது. ஒரு ஜாதகத்தில் தசா புத்திக்கான பலன்களை லக்னத்தை வைத்து கூறுகிறோம். என் அனுபவத்தில் பெரும்பான்மையாக கோச்சார பலன்கள் லக்னத்திற்கே அதிகப்படியாக பலன் தருகிறது. சமீபத்தில் நாம் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி 2.6.2026 அன்று நடக்க உள்ளது.

மிதுன ராசியில் சஞ்சரித்த குருபகவான் கடக ராசிக்கு சென்று உச்சமடைய போகிறார். உங்கள் சுய ஜாதகத்தில் கோச்சார குருவின் பார்வை எந்த பாவகத்தின் மேல் பதிகிறதோ அந்த பாவக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வலிமை பெற்றவர் குருபகவான் மட்டுமே. இந்தக் கட்டுரையில் குருவின் பார்வையால் விலகும் தோஷங்களையும் சாபங்களையும் நாம் பார்க்கலாம்.

திருஷ்டி தோஷம்

கோச்சார குருவின் பார்வை உங்கள் லக்னம் அல்லது லக்னாதிபதியின் மேல் பதிந்தால் கண் திருஷ்டி, செய்வினை மாந்திரீக பாதிப்புகள் அகலும். பய உணர்வு குறையும். ஆன்மீக சிந்தனை, தாராள மனப்பான்மை, பொறுமை, செல்வாக்கு, புகழ், அந்தஸ்து , கௌரவம், எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கை தைரியம் உயரும். ஆன்ம பலம் அதிகரிக்கும்.

சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் குறையும். தடைகற்கள் படிக்கற்களாக மாறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தடைகள் அகலும். சமுதாய அந்தஸ்து அனுபவ அறிவு கூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசியல் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி

வாக்கு தோஷம்

கோச்சாரக் குருவின் பார்வை சுய ஜாதகத்தில் உள்ள இரண்டாம் அதிபதியை அல்லது இரண்டாம் இடத்தை பார்த்தால் வாக்கு தோஷம், சத்திய தோஷம் அகலும். வாக்கு வன்மையும் பேச்சுத் திறனும் அதிகரிக்கும். பொருள் குற்றம் குறையும். வறுமைக்கடன் போன்றவைகள் இருந்த இடம் தெரியாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சிற்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை தருவார்கள்.

குடும்பத்தில் நிம்மதி கூடும்.

வாக்கால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். பிரிந்த குடும்ப உறவுகள் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சகோதர தோஷம்

கோச்சாரக் குருவின் பார்வை மூன்றாம் இடத்தில் அல்லது மூன்றாம் அதிபதியின் மேல் பதியும் போது சகோதர தோஷம் அகலும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். இளம் பருவத்தினருக்கு உடன் பிறந்த சகோதரம். பிறக்கும். அண்டை அயலாறுடன் நல்லிணக்கம் உண்டாகும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். காணாமல் போன பொருள்கள் ஆவணங்கள் கிடைக்கும். தைரியம் வீரியம் கூடும். மனமகிழ்ச்சி தரும் நல்ல இடப்பெயர்ச்சிகள் நடக்கும். பாகப்பிரி வினைகள் சுமுகமாகும்.கலை, இசை, பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் கூடும்.

பூமி தோஷம்

கோச்சார குரு பகவான் சுய ஜாதகத்தில் உள்ள நான்காம் அதிபதியை அல்லது நான்காம் இடத்தை பார்த்தால் பூமி தோஷம் அகலும். எவ்வளவு வாஸ்து குறைவான சொத்துக்கள் இருந்தாலும் கோச்சார குருவின் பார்வை நான்காம் இடத்தின் மேல் பதியும்போது அதை நிவர்த்தி செய்ய எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். பூமியில் நல்ல அதிர்வலைகள் உருவாகும். கிணறு வெட்டுதல் போரிங் போடுதல் போன்ற பலன்கள் நடக்கும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய சொத்துக்கள் சேரும். விவசாய நிலம் செழிப்படையும். தாய்வழி உறவுகளுடன் நல்லிணக்கம் உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

புத்திர தோஷம்

ஜோதிடத்தில் உள்ள பல்வேறு தீராத தீர்க்க முடியாத பல்வேறு விதமான தோஷங்களில் புத்திர தோஷமும் ஒன்றாகும். கோச்சார குருவின் பார்வை ஐந்தாம் இடத்தையோ, ஐந்தாம் அதிபதியையோ தொடர்பு கொள்ளும்போது புத்திர பிரார்த்தம் உண்டாகும். குலதெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நிறைவேற்ற முடியாத தெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாக அமையும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். பூர்வீகம் சார்ந்த விஷயங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெளியூர் வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து தானம் தர்மம் செய்வார்கள்.

சத்ரு தோஷம்

ஒருவர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் அவரை சத்ரு தோஷம் உருத் தெரியாமல் அழித்து விடும். ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள ஆறாம் இடத்தை அல்லது ஆறாம் அதிபதியை கோச்சார குரு பகவான் பார்க்கும் பொழுது சத்ரு தோஷம் அகலும். எதிரிகள் தொல்லை நிரந்தரமாக ஒழியும். போட்டி பொறாமையால் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மன உளைச்சல்கள் சீராகும். நிரந்தரமான நிலையான உத்தியோக வாய்ப்புகள் தேடிவரும். மனம் விரும்பிய இடப்பெயர்ச்சி தேடி வரும். வீடு, வாகன, சொத்து கடன் கிடைக்கும். நோய் தாக்கத்திற்கு உரிய மருத்துவம் கிடைக்கும்.

களத்திர தோஷம்

ஜோதிடத்தில் திருமணத் தடையை வழங்கும் பல்வேறு விதமான தோஷங்களில் களத்திர தோஷமும் ஒன்றாகும். இதில் நன்மை தரும் களத்திர தோஷமும் உண்டு தீமை தரும் களத்திர தோஷமும் உள்ளது. சுய ஜாதகரீதியான 6, 8, 12ம் அதிபதிகள் பாதகாதிபதிகள் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை தொடர்பு கொள்வது திருமணத்திற்கு முன் திருமண தடையையும் திருமணத்திற்கு பின் பிரிவினையும் தரக்கூடிய அமைப்பாகும். லக்ன ரீதியான 2, 3, 4, 7, 9,10ம் அதிபதிகள் களத்திர ஸ்தானத்தை தொடர்பு கொள்ளும் போது திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். உரிய வயதில் திருமணம் நடக்கும். கோச்சார குரு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை அல்லது ஏழாம் அதிபதியை தொடர்பு கொண்டால் எந்த விதமான பாதிப்புகள் இருந்தாலும் அகன்று திருமணம் நடக்கும்.

ஆயுள் தோஷம்

சிலரின் ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடம் வளம் குறைந்து ஆயுள் தொடர்பான பாதிப்புகளை அடிக்கடி ஜாதகருக்கு ஏற்படுத்தும். இது சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தையும் ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இது போன்ற எந்த விதமான பாதிப்புகள் இருந்தாலும் கோச்சார குருவின் பார்வை அஷ்டமாதிபதி அல்லது அஷ்டம ஸ்தானத்திற்கு இருந்தால் ஆயுள் சார்ந்த பயம் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து அல்லது நகைகள் கிடைக்கக்கூடிய அமைப்பு உருவாகும்.

பித்ரு தோஷம்

ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் அல்லது ஒன்பதாம் அதிபதியே கோச்சார குரு பகவான் தொடர்பு கொள்ளும் காலத்தில் பித்ரு தோஷம் அகலும். குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு முறையான வழிபாடுகள் செய்யாதவர்கள் அல்லது அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய உரிய வழிபாட்டு முறையை கடைபிடிக்காதவர்களுக்கு ஏற்படக்கூடிய பித்ருக்கள் தோஷம் அகலும். இந்த காலகட்டங்களில் தில ஹோமம் செய்பவர்களுக்கு பல தலைமுறைகளாக தீராத தீர்க்க முடியாத முன்னோர்கள் சாபம் அகலும். தந்தை வழி உறவுகளுடன் நல்லிணக்கம் உண்டாகும். வெளிநாட்டு பயணத்தில் நிலவிய தடைகள் அகலும்.

கர்ம தோஷம்

ஒரு ஜாதகத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் பலம் இழந்தால் நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் அமையாது. அல்லது தொழிலில் அதிகப்படியான நட்டம் ஏற்படும். அரசியல் அரசாங்கம் சார்ந்த வகையில் பாதிப்பு உண்டாகும். தொழிலில் பெயர் சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் வருமானம் இருந்தாலும் தொழிலிருந்தாலும் நிம்மதி இருக்காது. பல தலைமுறைகளாக ஆண் வாரிசு உருவாகாது. சட்டம் தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும்.

இது போன்ற பாதிப்பு இருப்பவர்கள் கோட்சார குரு பகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை தொழில் ஸ்தான அதிபதியை பார்க்கும் காலத்தில் சிவ வழிபாடு செய்வதன் மூலம் கர்மதோஷ பாதிப்புகளை தீர்க்க முடியும்.

முடக்கு தோஷம்

ஒருவரின் ஜாதகத்தில் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானம் முடக்கு தோஷத்தால் பாதிக்கப்பட்டால் எண்ணங்களும் ஆசைகளும் கனவுகளும் லட்சியங்களும் எளிதில் நிறைவேறாது. தொழில் உத்தியோகத்தில் நிலையான தன்மை இருக்காது. லாபம் குறையும். பெரிய திட்டம் தீட்டுவார்கள் நுண்ணறிவு அதிகமாக இருக்கும். ஆனால் வெற்றி கிட்டாது .இவர்களின் திறமை இவர்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். ஜாதகருக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. ஊருக்காக வாழ்வார்கள்.

இது போன்ற நிலை இருப்பவர்கள் கோச்சார குரு பகவான் லாப ஸ்தானத்தை பார்க்கும் காலங்கட்டங்களில் திருவண்ணாமலை சென்று வந்தால் அனைத்து விதமான நல்ல பலன்களும் தேடிவரும் எண்ணங்களும் லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறும்.

விரய தோஷம்

சிலரின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது இருக்காது. வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருக்கும். மருத்துவமனை செலவுகள் கூடிக் கொண்டே இருக்கும். தீராத தீர்க்க முடியாத மன பாரத்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. வெளிநாட்டில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். கடன் பிரச்சனையால் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் படுத்த படுக்கையாக பல வருடம் இருப்பார்கள். பொருளாதார சிந்தனை அதிகமாக இருக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள். உடலைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கும்.

இது போன்ற குறைபாடு இருப்பவர்கள் கோச்சார குருவின் பார்வை அயன சயன விரய ஸ்தானத்திற்கு அல்லது அயன சயன விரய ஸ்தான அதிபதிக்கு ஏற்படும் காலங்களில் திருச்செந்தூர் முருகனை வழிபட நிம்மதி கூடும். ஒரு ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வலிமை கோட்சார குருவிற்கு உள்ளது என்பதால் சுய ஜாதக பலன் அறிந்து செயல்படுவது நல்லது.

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com