மார்கழி மாத அமாவாசையை யொட்டி மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மார்கழி மாத அமாவாசையை யொட்டி மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்
Published on

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com