பொங்கலூர் அருகே 34 ஆண்டுகளுக்கு பின் திரவுபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்தபடம்.
பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்தபடம்.
Published on

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

இதனை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந்தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

மதியம் 3 மணிக்கு தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7-ந்தேதி மாலை 4 மணிக்கு உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 8-ந் தேதி காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளிப்பாளையம், துத்தாரிபாளையம் மற்றும் வலையபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com