திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இன்று இரவு மகிழடி சேவை நடக்கிறது.திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.

இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், வடிவுடையம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.

கல்யாணசுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது. பின்னர் பால், பழம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம் நடைபெற்றது.

இன்று இரவு 9 மணிக்கு கல்யாணசுந்தருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடை பெறுகிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் அதி காரிகள் செய்து இருந்தனர். திருக்கல்யாண விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர்மீரா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com