திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பாலாலயம் தொடங்கியது

2012-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாளை புண்ணியாவாஜனம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பாலாலயம் தொடங்கியது
Published on

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ள இந்த கோவிலில், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் தொடங்கும் முன்பு, கோவிலில் பாலாலயம் நடைபெறும். இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு நேற்று மாலை யாக சாலை பூஜையுடன் பாலாலயம் தொடங்கியது. அதன்பின்னர் பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகாசாந்தி திருமஞ்சனம், யாகம் நடைபெற உள்ளது. பின்னர் நாளை (புதன்கிழமை) புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.

தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளது. இதனால், கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் உற்சவங்கள் நடைபெறாது. திருப்பணிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com