தங்க அங்கி ஊர்வலம் சபரிமலைக்கு புறப்பட்டது

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. மண்டலபூஜையையொட்டி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்ட போது எடுத்த படம்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்ட போது எடுத்த படம்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலையில் புறப்பட்டது.

முன்னதாக கோவிலில் தங்க அங்கிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன், உறுப்பினர்கள் மனோஜ், தங்கப்பன், மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் இரவு ஓமல்லூரில் தங்கியது. இன்று (வியாழக்கிழமை) இரவு கோண்ணியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு பெரிநாட்டிலும் தங்கிய பிறகு தங்க அங்கி ஊர்வலம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு சென்றடையும்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார தீபாராதனை, வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

26-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பகல் 11.55 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில்

மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 25-ந் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.

41 நாட்கள் மண்டல பூஜை 26-ந் தேதி நிறைவடைகிறது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com