ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது.
நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றபோது எடுத்த படம்.
நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com