சிவராத்திரி கதை: திருடனுக்கும் சிவலோக பதவி

சிவபுராணத்தில் எத்தனையோ கிளைக் கதைகள் உள்ளன. சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை இது.
சிவராத்திரி கதை: திருடனுக்கும்  சிவலோக  பதவி
Published on

அக்காலத்தில் மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோவிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோவில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலை உயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான்.

பின்னர், மாறு வேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத் துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கி கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன.

பதுங்கி கொண்டிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், வயிற்று பசிக்கு உணவுமில்லாமல் உறக்கமும் இல்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். நடு நிசியில், மகாசிவராத்திரியில் சிவதரிசனம் கண்டு மக்கள் இறைவனை துதித்து மகிழ்ந்தனர். விடியற் காலையில் சம்பகன் கோவிலை விட்டு வெளியேறி, காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சை எடுத்து உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிரும் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்து சென்றனர்.

எமதர்மன் தன் அமைச்சரான சித்ர குப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறு பற்றிக்கேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறிவிட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசி காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

சம்பகன் அவனையும் அறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com