சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து பூஜை

கடந்த அக்டோபர் 6-ந் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து பூஜை
Published on

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதனை கோவில் முன் மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் அந்தப்பொருள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

முந்தைய காலங்களில் துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முத்தூர் அருகே மங்களப்பட்டியை சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்ற பக்தரின் கனவில் உத்தரவான இளநீர், தென்னை ஈக்குமாறு நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

தற்போது வைத்து பூஜிக்கப்படும் இளநீர், தென்னை ஈக்குமாறு ஆகியவை சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com