சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Published on

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.

இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாத பூஜை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க நிமிடத்திற்கு 80 முதல் 90 பக்தர்களை 18-ம் படி வழியாக கொண்டு சென்றால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

பொதுவாக மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீஸ் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது 170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது.

மாத பூஜையில் வரலாறு காணாத கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இனி மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சொல்கிறது.

முதலில் முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு முறையில் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பக்தர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் கூட அவதிக்குள்ளானார்கள். இதுதவிர ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மீது கூறப்பட்டது.

அதே சமயத்தில் உடனடி முன்பதிவு மூலம் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என அரசு கருதியது. எனவே இந்த முறை முதலில் உடனடி முன்பதிவு ரத்து அறிவிப்பும், பின்னர் பக்தர்களின் எதிர்ப்பால் ரத்து அறிவிப்பு வாபசும் பெறப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் முன்பதிவு முறைக்கு 80 ஆயிரம், உடனடி முன்பதிவு முறைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தற்போதைய குழப்பமான அறிவிப்பு மற்றும் கடந்த மண்டல பூஜை சமயத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியில் குளறுபடி போன்ற காரணத்தால் சீசன் காலத்தில் நிம்மதியாக ஐயப்பனை தரிசிக்க முடியாது என நினைத்த பக்தர்கள், முன்கூட்டியே இந்த ஐப்பசி மாத பூஜைக்கு ஒருசேர ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் மாத பூஜையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com