

ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் செடல் உற்சவ திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான செடல் உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கோவில் தக்கார் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் கவிதா, முன்னாள் நகர மன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், ஏ.ஜி.மதியழகன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜி.எம். வினோத்குமார் மற்றும் விழா குழுவினர், முக்கிய ஸ்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறும். இதனை தொடர்ந்து சிகர விழாவான 9-ம் நாள் உற்சவமான செடல் உற்சவ விழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அப்போது ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செடல் குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பின்னர் 10-ம் நாள் உற்சவத்தையொட்டி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.