தஞ்சையில் முத்துப்பல்லக்கில் முருகன்-விநாயகர் வீதி உலா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது.முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது.
தஞ்சையில் முத்துப்பல்லக்கில் முருகன்-விநாயகர் வீதி உலா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

தஞ்சை மாநகரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் குருபூஜையையொட்டி முத்துப்பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த விழாவின்போது தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நேற்று நடந்தது

தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முத்து பல்லக்குவிழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருஞானசம்பந்தர் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். மானம்புச்சாவடியில் உள்ள கமலரமண்ய விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரண்ய விநாயகரும் எழுந்தருளினர்.

இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமியும், தஞ்சை ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதாண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர்.

இதேபோல் தஞ்சை மாநகரில் கீழவாசல் உஜ்ஜைனி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில், வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில், ரெட்டிப்பாளையம் வெற்றி முருகன் உள்ளிட்ட 11 கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்றுஇரவு தொடங்கி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீதி உலா தாமதமாக புறப்பட்டது. பல கோவில்களில் இருந்து மழை நின்ற பின்னரே முத்துப்பல்லக்கு புறப்பட்டு வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com