நாளை மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 1000 போலீசார் பாதுகாப்பு

யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 1000 போலீசார் பாதுகாப்பு
Published on

வடவள்ளி:

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7-ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.

இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. கோவிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.

கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்துதல் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை (4-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது.

முன்னதாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பா பிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.

டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

படிப்பாதை வழியாக வரும் பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வழிதோறும் பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை-மருதமலை சாலையில் நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com