கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக வந்தன. பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.
கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8-ம் திருவிழாவான 1-ந் தேதி இரவு தேர் பவனி நடந்தது. அன்றைய தினம் 3 தேர்கள் பவனியாக வந்தன.

9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக வந்தன. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் நாள் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெரு விழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்்கள் கலந்து கொண்டு தேர் பவனியின் போது உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவையொட்டி கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் மிட்டாய் விற்பனை அமோகமாக நடந்தது.

திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com