குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: பூப்பல்லக்குகள் விடிய விடிய வீதி உலா

பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
14 அடி உயர சமயபுரத்து அம்மன். குடியாத்தம் கெங்கையம்மன் பூப்பல்லக்கு வீதி உலா நடந்தபோது எடுத்த படம்.
14 அடி உயர சமயபுரத்து அம்மன். குடியாத்தம் கெங்கையம்மன் பூப்பல்லக்கு வீதி உலா நடந்தபோது எடுத்த படம்.
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடந்தது. கடந்த 11-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது.

விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழுவை சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.

சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்டு அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புத்துஅம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.

அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது.

பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.

ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மின் பணியாளர்கள் பூ பல்லுக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதாலும், இரவிலும் அனல் காற்று வீசுவதாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பூப்பல்லக்கு செல்லும் பகுதிகளில் பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com