பெண்களுக்கே உரிய அவ்வையார் விரதம்

விரதத்திற்கு செவ்வாய் பிள்ளையார் விரதம், பாட்டி வழிபாடு என்பது உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
avvaiyar viratham
Published on

அவ்வையார் விரதம்

ஆடி மாதத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எத்தனையே விரதங்கள் உள்ளன. ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், மங்களகவுரி விரதம் உள்ளிட்டவைகள் உள்ளன. அதே போல் பெண்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விரதம் அவ்வையார் விரதம் ஆகும்.

ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.

இந்த விரதத்திற்கு செவ்வாய் பிள்ளையார் விரதம், பாட்டி வழிபாடு என்பது உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. குடும்ப நலன், திருமண வரம், மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.

கொழுக்கட்டை

இந்த விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் அவ்வையார் விரதத்தை தொடங்குவார்கள். இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டை தயாரிப்பார்கள். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை அவ்வையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். அவ்வையார் அம்மனை நினைத்து விளக் கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. இந்த விரதத்திற்காக தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளும் கூட ஆண்களுக்கு கொடுக்கப்படுவது கிடையாது.

ஆடி செவ்வாய் வழிபாட்டின் சிறப்பு

ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை தோஷங்களும், அத்தனை கஷ்டங்களும் விலகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. 2 குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷம்

இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது இறைவனின் ஆசிகளை பெற்று தரும். ஆடி செவ்வாய்களில் விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு அந்த தோஷத்தின் கேடான பலன்கள் நீங்கும். அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இதனால் எல்லோரையும் காக்கும் தாயான அம்மனின் மனம் குளிர்ந்து நமக்கு ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திர பேறு தாமதம் நீங்கும். கடன்கள் தீரும். மற்றும் எல்லா வித வளங்களும் உண்டாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com