

பாகூர் கொம்யூன் பெரிய கன்னிக்கோவில் என்று அழைக்கப்படும் மன்னாதீஸ்வர உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி சாமிக்கு பூப்போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் உபயதாரர்கள் சார்பில் மாலை 6 மணிக்கு சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது.
மேலும் விழாவையொட்டி இன்னிசை கச்சேரியும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா ஆடி 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று மாலை நடக்கிறது. இதனை–யொட்டி இன்று காலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும் பெண் அழைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு விநாயகர், மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு சாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
மாலை 5 மணிக்கு தீமிதி திரு–விழாவும் அதனைதொட–ர்ந்து சாமி வீதி உலாவும் நடை––பெறுகிறது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை (சனிக்கிழமை) மாலை தெப்பல் உற்ச–வம் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 9- ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் ஊர்பொது–மக்கள், இளை–ஞர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். குடும்பங்கள் செல்வ செழிப்புடனும், நோய் நொடியின்றி வாழவும், தீமிதித்து அம்மனை வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
தீமிதிக்கும் பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் தீமிதிப்பது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும். மேலும் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தீமிதிப்பது மெய்சிலிர்க்க வைக்கும்.