திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு சர்வ அலங்காரமும், விசேஷ பூஜையும் நடந்தது.

இதனையடுத்து மேளதாளம் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமானின் அருள் பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்திற்கு புனித நீர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பகல் 11.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி வருகிற 17-ந் தேதி வரை தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி தை கார்த்திகை தேரோட்டமும், தெப்ப முட்டு தள்ளுதலும் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 17-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி அமர்ந்து 3 முறை வலம் வருதல் நடக்கிறது. மேலும் அன்று இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com