திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்த படம்.
சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாள் மாலையில் நடந்தது.

7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 8-ம் திருநாளான நேற்று மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கந்தசஷ்டி விழாவின் 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பொது தரிசனத்திலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி விழாவையொட்டி வீடுகளிலேயே விரதம் இருந்த ஏராளமான பக்தர்களும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து முருகபெருமானை தரிசித்தனர். எனினும் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com