

சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான், திருவஞ்சைக்களம் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். சேரமான் பெருமானும், சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரரும் நல்ல நட்புடன் இருந்து வந்தனர். ஒரு சமயம் சுந்தரர், திருவஞ்சைக்களம் கோவிலுக்கு சென்று, இவ்வுலக வாழ்க்கையை துறக்க முடிவு செய்தார். தனக்கு சிவபதம் கொடுத்து அருள வேண்டும் என இறைவனிடம் வேண்டினார். அதன்படி இறைவன் சுந்தரரை அழைத்துவர சிவகணங்களை அனுப்பினார். அவர்களும் ஒரு வெள்ளை யானையில் சந்தாரை அழைத்துக்கொண்டு கயிலாயம் புறப்பட்டனர்.
இந்த செய்தியை அறிந்த சேரமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதற்காக திருவஞ்சைக்களம் சென்று, தன்னுடைய குதிரை மீதேறி, அதன் காதில் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். இதையடுத்து, குதிரை வானில் சுந்தரரை தொடர்ந்து பறக்க தொடங்கியது. பின்னர், சுந்தரரும், சேரமானும் ஒன்றாக கயிலாயம் சென்று சிவபதம் அடைந்தனர். இந்த நிகழ்வு நடந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று தான்.
சுந்தரர் கயிலாயம் செல்ல உதவியது. வெள்ளை யானை ஆகும். மேலும் அவர் கயிலாயம் சென்றதும், சிவபெருமான் சுந்தரருக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானை வடிவில் காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று, வெள்ளை யானை வீதி உலா நடத்தப்படுகிறது.
அப்போது கோவில் யானைக்கு திருநீறு பூசி வெள்ளையாக மாற்றுகின்றனர். அந்த வெள்ளை யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா வருவர்.