

ராமாயணத்தில், ராமன் மீது குகன் எவ்வளவு கொண்டிருந்தாரோ, அதே அளவு மகத்துவம் நிறைந்தது, சபரியின் ராம பக்தி. சபரி ஒரு வேடுவப் பெண். தேன் சேகரித்து விற்பனை செய்வதே அவர்களது தொழில். சபரிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றபோது, விருந்துக்காக ஏராளமான காட்டு விலங்குகள் கொல்லப்பட்டன.
மிகவும் இளகிய மனம் படைத்த சபரி, இதை அறிந்து “எனது திருமணத்துக்காக இத்தனை உயிர்களை கொல்ல வேண்டுமா. அப்படி ஒரு திருமணம் எனக்கு தேவையில்லை” என்று பெற்றோரை பிரிந்து சென்றார்.
சபரிக்கு மாதங்க முனிவர் அடைக்கலம் கொடுத்தார். சபரி, மாதங்க முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் பணிவிடை செய்து வந்தார். அதே நேரம் மாதங்க முனிவர், சபரிக்கு நல்லுபதேசங்களையும் உபதேசித்தார். ஆனால் வேடுவ இன பெண்ணான சபரிக்கு ஆசிரமத்தில் இடம் கொடுத்தது, சக முனிவர்களுக்கு பிடிக்கவில்லை.
மாதங்க முனிவர் தனது இறுதி காலத்தில் சபரியை நோக்கி, “சபரி.. நீ வேடுவ குல பெண்ணாக இருந்தாலும், நீ செய்த நற்கர்மங்களின் பலனாக, ராமர் இங்கு உனக்கு தரிசனம் தருவார்" என்று கூறினார். முனிவரின் அந்த வார்த்தை கேட்டு மனம் மகிழ்ந்த சபரி, ராமரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார். தினமும் ராம மந்திரத்தை ஜெபித்து கொண்டே இருந்தார். ராமர் வரும்போது, அவருக்கு சேவை செய்ய வேண்டி, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து காட்டிற்கு சென்று பழங்களை சேகரித்து வந்தார். பல வருடங்களாக ராமர் வருகையை எதிர்பார்த்திருந்தார்.
ஒரு நாள் சபரி பம்பா நதியில் இருந்து நீர் எடுத்து வந்தபோது, ஒரு முனிவரின் மீது நீர் பட்டது. இதனால் மிகவும் கோபம் அடைந்த முனிவர், சபரியை தூற்றினார். மீண்டும் பம்பா நதியில் நீராடினால் தான் தீட்டு போகும் என பம்பா நதியில் நீராட இறங்கினார். அடுத்த நிமிடமே பம்பா நதி, குருதிச் சாக்கடையாக மாறியது. அன்றிலிருந்து பம்பா நதி, யாரும் பயன்படுத்த முடியாதபடி ஆனது.
ராமருக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சபரி, வயதான காலத்திலும் ஊன்றுகோல் உதவியுடன் ராமருக்காக பழங்களை பறித்து வந்தார். அவர் பழங்களை சுவைத்து பார்த்து, அதில் சுவையானதை ஒரு கூடைக்குள் வைத்தார். ராமருக்கு நல்ல, சுவையான பழங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்.
வயதான காலத்திலும் ராமர் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பது சபரிக்கு சலிப்பையோ, ஏமாற்றத்தையோ அளிக்கவில்லை. ஏனென்றால் ராம பிரான், தனக்கு நிச்சயம் தரிசனம் தருவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ராமரின் திருவுருவத்தை பற்றி சிஷ்யர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு, அதை மனதில் பதித்து தியானித்தார்.
சபரியின் காத்திருப்பு வீண் போகவில்லை. வனவாசத்தின் போது, சீதையை தேடி வந்த ராமர், பம்பை நதியோரத்தில் இருந்த சபரியின் ஆசிரமத்திற்கு வந்தார். ராமரின் தரிசனத்தால் மகிழ்ச்சி அடைந்த சபரி, ஆனந்த கண்ணீருடன் வரவேற்றார். ராமரின் முகத்தை பார்த்தபடியே மெய் மறந்தார். ராமருக்கு உணவளிக்க எண்ணிய சபரி, பழங்களை கொண்டு வந்து, சுவைத்து பார்த்து சுவைமிக்கதை ராமருக்கு கொடுத்தார். ராமரும், எச்சில் பழம் என்று பார்க்காமல், அதில் இருந்த அன்பை பார்த்தார். சபரி தந்த பழங்களை விரும்பி உண்டார்.
பின்னர் ராமர், சபரியிடம் 'தாயே, உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். அதற்கு சபரி, “இறைவா, பம்பா நதி, குருதிச் சாக்கடையாக மாறி இருக்கிறது. அதை தூய நதியாக மாற்ற வேண்டும்” என்றார்.
ராமர், 'உங்கள் பாதம் நதியில் பட்டாலே நீரின் மாசு நீங்கிவிடும்" என்றார்.
அதன்படி, ராமர் நாமத்தை உச்சரித்தபடியே சபரி பம்பா ஆற்றில் இறங்கினார். அவர் பாதம் பட்டதும், பம்பா நதி தூய்மையானது. பின்னர், ராமரின் தரிசனத்தை பெற்ற மகிழ்ச்சியில் இந்த உலக வாழ்க்கையை துறக்க விரும்பினார், சபரி. அதன்படி ராமரை நினைத்தபடியே சபரி மோட்சம் அடைந்தார்.
ராமரால் 'தாயே' என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர், சபரி. இவர் இருந்த மலையே சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, தூய்மையான பக்திக்கு சிறந்த உதாரணமாக விளங்கியவர் சபரி.