

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். இக்கோவிலில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.
மேலும் மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு பல்லக்கிலும் மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9-ம் நாளான 15-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
11-ம் திருநாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ம் திருநாளான 18-ந் தேதி காலை பல்லக்கிலும் இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார்.