சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்

சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தென் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ஸ்ரீ சாய் கற்பகவிருக்‌ஷா அறக்கட்டளை சார்பில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பக்தர்கள் அளித்த நன்கொடைகள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலின் தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், ரூ.30 கோடி மதிப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 17-ந்தேதி நான்கு கால யாகசாலை பூஜைகளுக்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இதனையடுத்து 18-ந்தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு யானை, குதிரை ஆகியவற்றின் மீது வைத்து அதிர்வேட்டுகள் முழங்க புனிதநீர் குடங்களை அக்கரைப்பட்டி கோவில் யாகசாலைக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் நிரம்பிய குடங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டன. அதன் பின், அந்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்க 9.40 மணிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வணங்கினர்.

விழாவில் திரைப்பட நடிகர்கள் மதன்பாபு, மயில்சாமி மற்றும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், குளியலறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com